சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து பல்வேறு தலைவர்கள் நேரில் வந்து விசாரித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காவேரி மருத்துவமனை வருகை தந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் நலம் விசாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதையொட்டி, சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலையம் முதல் காவேரி மருத்துவமனை வரை போக்குவரத்து ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.
இதனையடுத்து, 2.15 மணியளவில் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
பிற்பகல் 2.45 மணியளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனைக்கு சென்றடைந்தார். திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் கேட்டறிந்தேன். தமிழக முன்னாள் முதல்வரும், முதுபெரும் தலைவருமான கருணாநிதி விரைவில் குணமடைந்த வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.