ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து கூறியது பற்றி தனக்கு தெரியாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ், “ தமிழகத்திற்கு தற்போது 23 ஆயிரத்து 35 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. மத்திய அரசு 10 ஆயிரத்து 624 கிலோ லிட்டர் வழங்கி வருகிறது. ஆகவே மீதமுள்ள அளவை வழங்கவேண்டும் என வலியுறுத்தி மத்திய நிதி பெட்ரோலியத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களிடம் தமிழகத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது. விரைவிலேயே பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து கூறியது பற்றி எனக்கு தெரியாது.
பொது விநியோகத் திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தமிழக அரசு மட்டும் தான். ஒரு கோடியே 99 லட்சம் குடும்ப அட்டைகள் மின்னணு அட்டைகளாக மாற்றப்பட்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை போன்ற திட்டத்தால் தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்டம் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு குறுவை சாகுபடி இல்லாதபோதும், 19 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்திருக்கிறோம். தற்போது காரிப் பருவம் நிறைவடைந்து உள்ளதால் செப்டம்பர் மாதத்தில் கணக்கு வழக்குகள் முடியும் சமயத்தில் நெல் கொள்முதல் செய்வதில் இரண்டு மூன்று நாட்கள் பிரச்சனை இருக்கும். அது இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரிசெய்யப்பட்டு அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் செயல்படும்.” என தெரிவித்தார்.
முன்னதாக ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் கண்டிப்பாக இணையும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.