வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், சாதி, மதம் அற்றவர் என அரசிடம் சான்றிதழ் பெற்று சாதனைப் பதிவை நிகழ்த்தியுள்ளார்.
இங்கே பெரும்பாலானோர் பள்ளி அல்லது கல்லூரி நாட்களில் சாதி சான்றிதழை பெற்றிருப்பார்கள். ஆசைப்பட்டு வாங்கவில்லை என்றாலும் கூட மேற்படிப்பில் இடஒதுக்கீட்டிற்காக விண்ணப்பிக்க என ஒவ்வொருவரும் ஒரு காரணத்திற்காக அதனை பெற்றிருப்பார்கள். ஆனால் திருப்பத்தூரை சேர்ந்த சிநேகா, சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்று சாதனைப் பதிவை நிகழ்த்தியுள்ளார்.
தற்போது வழக்கறிஞராக உள்ள சிநேகா, தமது பள்ளி படிப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை என எங்கேயுமே சாதி, மத அடையாளங்களை தெரிவிக்காமலேயே பயின்றுள்ளார். பள்ளி படிப்பு இறுதியில் சாதி மதம் அற்றவர் என்ற அடையாளத்தை அரசின் மூலம் பெற நினைத்த அவர், இதற்காக பல ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளார். இருப்பினும் சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் அளித்ததற்கான முன்னுதாரணங்கள் இல்லை என கூறி அதிகாரிகள் அவரது கோரிக்கையை நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீண்ட இடையூறுகளை கடந்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை தற்போது பெற்றுள்ளார் சிநேகா. பெண் வழக்கறிஞர் சிநேகாவின் இப்புரட்சிகரமான செயலுக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.