தமிழ்நாடு

"சிசேரியன் பிரசவங்களே கூடாது என சொல்லல; தவறாக விமர்சிக்கிறாங்க" - அமைச்சர் மா.சுப்ரமணியன்

webteam

அறுவை சிகிச்சை பிரசவங்களை தேவைப்படும் நேரங்களில் மட்டுமே செய்ய வேண்டும் எனவும், சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனவும், அறுவை சிகிச்சை பிரசவங்கள் மூலம் பணம் ஈட்டும் நிலை இருக்கக் கூடாது என்பது தான் நம் குறிக்கோள் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, துறை சார்பில் சர்வதேச பொது சுகாதார கருத்தரங்கம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தொடங்கியுள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள், அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கருத்தரங்கை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் பயணித்த பொது சுகாதார நூற்றாண்டு தீச்சுடர், அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொது சுகாதாரத்துறையின் நூறாண்டு சின்னம் முரசு கொட்டி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், மாநாட்டு சிறப்பு இசை பாடல் ஒலிபரப்பு, சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு, மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 100% வெற்றியடைவதற்கு பொது சுகாதாரத்துறையின் கிராம சுகாதார செவிலியர்களே காரணம். 98 லட்சம் பேர் இந்த ஒரே ஆண்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெற்றுள்ளனர். இன்னும் 15 நாட்களில் இந்த பயனாளர் எண்ணிக்கை 1 கோடியை எட்ட உள்ளது. அந்த கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் கையால் மருந்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது.

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் மூலம் மட்டுமே ஒன்றரை ஆண்டுகளில் 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அரசால் திட்டங்கள் தீட்டவும் நிதி ஒதுக்கவும் மட்டுமே முடியும். ஆனால் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்போர் மருத்துவப் பணியாளர்களே. கோவிட் தடுப்பூசி முதல் தவணை 98%, இரண்டாம் தவணை 96% பேருக்கு தமிழகத்தில் போடப்பட்டிருப்பதால் தான் கடந்த 6 மாதங்களாக ஒரு கோவிட் மரணம் கூட இல்லாமல் இருக்கிறது. இதற்கு காரணமும் பொது சுகாதாரத்துறை பணியாளர்களே. கொரோனா உயிரிழப்புகளில் இருந்து மக்களை காத்தவர்களும் இவர்களே” என்று தெரிவித்தார்.

மேலும், “அறுவை சிகிச்சை பிரசவங்களே கூடாது என நான் சொல்லவில்லை. தேவைப்படும் நேரங்களில் மட்டுமே செய்ய வேண்டும். சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அறுவை சிகிச்சை பிரசவங்கள் மூலம் பணம் ஈட்டும் நிலை இருக்கக் கூடாது என்பது தான் நம் குறிக்கோள். அறுவை சிகிச்சை பிரசவங்களே கூடாது என்று நான் சொன்னதைப் போல் சமூகவலைதளங்களில் கட்டுரை எழுதி ஒரு மருத்துவர் விமர்சிக்கிறார். விமர்சனங்களை புறம் தள்ளி ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.