தமிழ்நாடு

"என்னால் என்னையே பொறுத்துக்கொள்ள முடியவில்லை"- இளையராஜா

Rasus

இளையராஜாவின் கருத்து சர்ச்சைக்குரியதாகி இருக்கும் நிலையில் அவரின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில்
பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மியூசிக் யூனியன் சார்பில் ஜூன் 2-ஆம் தேதி இசைக்கச்சேரி நடைபெற உள்ளதையொட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு  இளையராஜா
பேட்டியளித்தார். இசைக் குறிப்புகள் எழுத கற்றுக் கொண்ட ஆரம்ப கால கட்டம் முதல், அவரின் திரை இசைப் பயணத்தில் நடந்த சுவாரஸ்ய
சம்பவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதில் 96 திரைப்படத்தில் இளையராஜாவின் 80 கால கட்டப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது
தொடர்பாக இறுதி கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் தான், சமூக வலைதளம் முழுவதும் பேசுபொருளாக
உருவெடுத்துள்ளது.

இளையராஜா பேசும்போது ‘ 80களில், 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன் நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?.
அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க வேண்டியதுதானே? இது மிகவும்  தவறான
விஷயம். இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத தனம்’ எனச் சாடினார்.

இளையராஜாவின் இந்த பேச்சுதான் இன்றைய சினிமாவில் ஹாட் டாக். இளையராஜா சொல்றதுல என்ன தப்பு இருக்கு என அவரை
ஆதரிக்கும் ஒரு தரப்பினரும், என்னதான் பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும் இப்படி எல்லாம் பேசக்கூடாது என மற்றொரு தரப்பினரும், சமூக வலைதளங்களில் போர் புரிந்து வருகின்றனர். ஆனால், முறையான அனுமதி பெற்றே 96 படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இளையராஜாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. சினிமா எக்ஸ்பிரஸ்
சார்பில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் இளையராஜா, “நான் பேசுவது, கோபப்படுவது. திட்டுவது இதை எல்லாவற்றையும் நீங்கள் சகித்துக்
கொண்டிருக்கிறீர்கள். உங்களை கோபப்படுத்துகிறேன். உங்களை ஒருமாரியாக நடத்துகிறேன். இது எல்லாம் எனக்கும் தெரிகிறது. ஆனால்
அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இது என்னுடைய இயற்கையான சுபாவமாக இருக்கிறது. என்னால் என்னையே பொறுத்துக்கொள்ள
முடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.