அரசியலில் ரஜினியோடு இணைவீர்களா என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியுடன் தான் திருப்தியாக இருப்பதாக அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக கட்சிக்குள் புதுப்புது மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி புதுப்புது கட்சிகள் நிறைய தொடங்கியுள்ளன. தினகரன், திவாகரன், பாஸ்கரன், தீபா என ஜெயலலிதாவை சார்ந்தே நிறைய கட்சிகள் தொடங்கப்பட்ட நிலையில் திரையுலகில் இருந்தும் கட்சிகள் முளைத்தன. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக கட்சியை தொடங்கவில்லை என்றாலும் கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கினார். சமீபத்தில் நடிகர் விஜயும் மேடையில் அரசியல் பேசி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு அரசியல் களத்தில் ரஜினிகாந்தோடு இணைய போவதாக தகவல்கள் பரவின. இது குறித்து குஷ்புவிடம் ட்விட்டரில் அரசியல் களத்தில் ரஜினிகாந்தோடு இணையப்போவதாக செய்திகள் வெளியாவது உண்மையா எனக்கேள்வி எழுப்பினர். அதுக்கு பதிலளித்த குஷ்பு ''நான் காங்கிரஸ் கட்சியுடன் திருப்தியாக இருக்கிறேன்'' என்று பதிலளித்து, அரசியலில் நான் ரஜினியோடு இணையமாட்டேன் என்று மறைமுக பதிலை அளித்துள்ளார்.