தமிழ்நாடு

வருவாரா மாட்டாரா? ரஜினி ரசிகர்கள் குழப்பம்

வருவாரா மாட்டாரா? ரஜினி ரசிகர்கள் குழப்பம்

webteam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என சில ரசிகர்களும் அரசியலுக்கு வரத் தேவையில்லை என சில ரசிகர்களும் கூறியுள்ளனர்.

ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளதால், இதில் அரசியல் பிரவேசம் பற்றி ஆலோசிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரம் அடுத்து வெளியாகவுள்ள அவரது திரைப்படத்துக்கான விளம்பர உத்தியே இந்தக் கூட்டம் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதுபற்றி ரஜினியிடம் கேட்டபோது, அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவே இந்தச் சந்திப்பு என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. ரஜினி ரசிகர்கள் மன்ற முன்னாள் தலைவர் சத்யநாராயணா, மற்றும் இப்போதைய தலைவர் சுதாகர் ரசிகர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். ரஜினி இன்னும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வரவில்லை. அவர் மாலையில் வரலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் கூடியுள்ள ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் நாளைய முதல்வர் என்று கோஷம் எழுப்பியபடி இருந்தனர். சில ரசிகர்கள், ‘ரஜினி அரசியலுக்கு வரத் தேவையில்லை’ என்றும் தெரிவித்தனர்.