sp.Velumani
sp.Velumani pt desk
தமிழ்நாடு

’நான் என்றென்றும் அதிமுககாரன்’-விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா எஸ்பி வேலுமணி? பின்னணிஎன்ன?

webteam

சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பாஜக உடனான உறவை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. இது பாஜக மற்றும் அதிமுகவின் கூட்டு நாடகம் என ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என அதிமுக தலைவர்கள் அடித்து கூறிவருகின்றனர்.

இத்தகைய சூழலில்தான் அதிமுக பாஜக உடனான கூட்டணி முறிவை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன? எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் வேகமெடுக்குமா? தாக்குதல்களை சமாளிப்பாரா எடப்பாடி பழனிசாமி? என்பது குறித்தெல்லாம் விவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

admk vs bjp

அதில் முக்கியமான ஒரு சவாலாக பலரும் கூறிவந்தது பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில், இபிஎஸ்-க்கு எதிராக வேலுமணியை பாஜக பயன்படுத்தக் கூடும் என்பதுதான். இதையடுத்து அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியை சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அதிமுக கொடியுடன் மிதிவண்டி பேரணி நடத்திய படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள எஸ்பி.வேலுமணி, என்னென்றும் அதிமுக-காரன் என தனது கருத்து பதிவிட்டுள்ளார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கூறியபோது..

அண்ணன் எஸ்பி.வேலுமணி அதிமுகவின் தீவிர விசுவாசி. அவருடை தந்தையார் காலம் தொட்டு அதிமுக தொடங்கிய காலம் முதல் இன்று வரை மாறாது இந்த இயக்கத்தோடு பயணிப்பவர். தடம் மாறாதவர், தடுமாறாதவர், சேர்வடையாதவர், சோரம்போகாதவர் என்கிற நற்சான்றிதழை கழகத் தொண்டர்கள் அவருக்கு வழங்குவார்கள்.

velumani

கோவை மண்டலத்தில் 10க்கு 10 தொகுதிகளை அதிமுக வெற்றி பெறுவதற்கு அயராமல் பணியாற்றியவர் எஸ்.பி.வேலுமணி. அதிமுகவில் உள்ள மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவர். ஆகவே அவர் குறித்தான பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அவைகள் எல்லாம் வெறும் வதந்திகள்தான். அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார் என்றே நாம் கருத வேண்டும்” என்றார்.

எஸ்.பி. வேலுமணியின் கருத்து குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறியன, “எஸ்.பி.வேலுமணி பாஜக வேண்டும் என்ற அணியை சேர்ந்தவராக இருப்பதால் இறுதிக்கட்டத்தில் பாஜகவிற்கு ஆதரவாக முடிவெடுப்பார் என்ற பேச்சு உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவாக மாறுவார் என்ற பேச்சு ஏன் வருகிறது என்றால் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் அதிமுகவைப் போன்று பாஜகவும் செல்வாக்கோடு உள்ளது. தேர்தல் சமயங்களில் அதிமுக பாஜக என்ற திமுக எதிர்ப்பு வாக்குகள் இரண்டாக பிரியும் போது இருவருக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும். அப்படியான நிலை ஏற்பட்டால் வேலுமணிக்கும் அரசியல் ரீதியான பின்னடைவு ஏற்படும். இந்த உண்மை வேலுமணிக்கும் தெரியும்.

மூத்த பத்திரிகையாளர் பிரியன்

இந்த பிரிவு தற்காலிகமானது. தேர்தல் நேரத்தில் மீண்டும் கூட்டணிக்கு சென்றுவிடலாம் என்பது தான் வேலுமணியின் எண்ணம். தேர்தல் அறிவித்தும் இது நடக்கவில்லை என்றால் தான் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாகவும், கொங்குப் பகுதிகளில் மட்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்துக் கொள்கிறோம் என்ற நிலைப்பாடு எடுப்பதற்கான வாய்ப்புள்ளது.

போனவருடம் மட்டும் மூன்று முறை அவருக்கு சொந்தமான வீடுகளில் ரெய்டு நடந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களிலேயே அதிகமான வழக்குகளை சந்திப்பவர் வேலுமணி தான். திமுக ஆட்சி 2024 க்குப் பின்னும் இருக்கும், அதேபோல் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமென சொல்கிறார்கள். இந்த சூழலில் நாம் பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்கலாம் என நினைக்கிறார்" என்றார்

”தனது x தளத்தில் என்றென்றும் அதிமுக காரன் என்றுதானே பதிவிட்டுள்ளார்?

“என்றென்றும் அதிமுககாரன் என போடுவார். என் வாழ்நாளில் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று 1998ல் சொன்னவர் ஜெயலலிதா. ஆனால், 2004ல் மீண்டும் கூட்டணி வைத்தார். வேலுமணி ஒரு பாதுகாப்புக்காக பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்கலாம் என்ற வாய்ப்பு தேர்தலின் நெருக்கத்தில் இருக்கிறது” என்றார்.

ஏன் வேலுமணி அதிமுகவில் பிரதானமானவர்?

அதிமுகவை பொறுத்தவரை மிகவும் வலுவான தலைவர்களில் முதன்மையானவராக எஸ்.பி.வேலுமணி திகழ்கிறார். கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய கோட்டையை நிறுவி இருக்கிறார். வேறு எந்த தலைவருக்கும் இல்லாத ஆதரவு அவருக்கு இருக்கிறது. ‘வேலுமணி அண்ணா’ என்று அழைக்கும் அளவிற்கு ஒரு பெயரை க்ரியேட் செய்து வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக நடந்த ரெய்டுகளில் அவர் காட்டிய மாஸ் அனைவரும் அறிந்ததே. பண பலத்திலும் வெற்றிகளை உறுதி செய்வதிலும் தேர்ந்தவராக தன்னை நிரூபித்து வருகிறார். அதனால், அத்தகைய நபரை கையிலெடுத்தால் ஏக்நாத் ஷிண்டே போன்ற ஒருவரை உருவாக்கிவிடலாம் என பாஜக நினைத்து இருக்கலாம். ஆனால், என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கையில் அதற்குள் ஏதேனும் மாறுதல் ஏற்படுமா அல்லது இதே நிலை நீடிக்குமா என்பதை காலம் பதில் சொல்லும்.