தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி தேவையில்லை: மத்திய அரசு

webteam

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இனி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் வேதாந்தா நிறுவனம், ஓஎன்ஜிசி நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தில் முறையாக ஒப்பந்தம் போட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 500 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை முறையாக பெற வேண்டும். அதே நேரத்தில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது வழக்கம்.

இந்த வழக்கத்தில் தற்போது மத்திய அரசு புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. அதாவது சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைப்பதற்கு இனி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற வேண்டியது கட்டாயம் கிடையாது. இதுதொடர்பாக‌ பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்கள் நடத்தவும் அவசியமில்லை.

ஏற்கெனவே டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒப்பந்ததாரர்கள் எளிமையான முறையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சில விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படும் என அறிவித்த நிலையில் தற்போது மத்திய சுற்றுச்சூழல் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.