நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் 100 ஆவது நாளை எட்டியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்று அந்த திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதே மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மக்களின் விருப்பத்துக்கு மாறாக எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது என்று தமிழக முதல்வரும், மத்திய அ்மைச்சர் பொன் .ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர். அதன்படி அப்பகுதி மக்கள் சுமார் 15 நாள்களுக்கு பிறகு தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் செய்வதாக அறிவித்தனர். இதற்கு பின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இதனால் மக்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். இந்த போராட்டம் இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ளது.
சட்டப்பேரவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து இன்றைய போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போது ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புக்காக உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.