தமிழ்நாடு

முதன்முறையாக யானைகளுக்கான ஹைட்ராலிக் விலங்குகள் ஆம்புலன்ஸ்

முதன்முறையாக யானைகளுக்கான ஹைட்ராலிக் விலங்குகள் ஆம்புலன்ஸ்

webteam

வனத்தில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதாலும் உயிருக்கு போராடும் யானைகள், மற்றும் ஆபத்தில் சிக்கும் விலங்குகளை காப்பாற்றி அதற்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவ வசதிகொண்ட பிரத்யேக ஹைட்ராலிக் ஆம்புலன்ஸை வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த ஆம்புலன்ஸ் வாகனம் வடிவடிமைக்கப்பட்டுள்ளது. அதே போல, வனச்சுற்றுலா செல்வதற்கு சுற்றுலா பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வனத்தில் சேற்றில் சிக்கி தவிக்கும் விலங்குகள், நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் இதேபோல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தீவனம், தண்ணீர் தேடி இடம்பெயரும் யானைகள், சிறுத்தை, மான்கள் வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு அடிப்பட்டு உயிருக்கு விலங்குகள் போராடும்போது அதனை மீட்டு சிகிச்சை அளிக்க உரிய வாகன வசதியில்லாமல் விலங்குகள் உயிரிழப்பதாக புகார்கள் எழுந்தன. 

இது போன்ற வன உயிரினங்கள் உயிரிழப்பை தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு வனவிலங்குகள் மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹாட்ராலிக் ஆம்புலன்ஸ் யானைக்காக இந்தியாவில் முதன்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் யானைகள், கிராமத்துக்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் யானைகள் போன்ற அசாதரண நிகழ்வுகளை ஏற்படுத்தும் யானைகளை வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு மாற்றும்போது வனத்துறையினர் சிரமத்துக்குள்ளாகின்றனர். பல நேரங்களில் யானைகள் வாகனத்தில் ஏற மறுப்பதால், இந்த ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், என்பஹைட்ராலிக் முறையில்  மோட்டார் உதவியுடன் கயிறு கட்டி யானையை எளிதில் உள்ளே ஏற்றிவிடலாம். இதில் 10 டன் வரை உள்ள யானைகளை ஏற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய சுற்றுலா அனுபவத்தை ஏற்படுத்த வனச்சுற்றுலா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான 30 பேர் அமரக்கூடிய வனச்சுற்றுலா பேருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நபர் ஒன்றுக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலை முதல் மதியம் வரை சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான பவானிசாகர் வனச்சரகத்தில் ஆன் லைன் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.