தமிழ்நாடு

உடல் உறுப்புகள் செயல் இழந்த மனைவி.. மனமுடைந்த கணவர்: காதல் தம்பதிக்கு நேர்ந்த சோகம்

webteam

வேற்று மாநிலத்தில், மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்த அரக்கோணம் நபர், உறவினர்கள் உதறித் தள்ளியதால் சொல்ல முடியாத துயரத்தில் தவிக்கிறார். திடீரென உடல் உறுப்புகள் செயலிழந்த மனைவியை, தாய் போன்று கவனித்து வரும் அவர், அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த நெப்போலியன், பணிக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்றபோது, அங்குள்ள மஞ்சுளா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். மாற்று சாதி பெண் என்பதால், இருவரின் உறவினர்களும் அவர்களை சேர்க்கவில்லை. காலப்போக்கில் எல்லா கவலையும் கரைந்துவிடும் என நினைத்த இந்த தம்பதிக்கு இடியாய் வந்தது அந்த சோதனை. ஆம் மஞ்சுளாவின் கழுத்துக்கு கீழ் உள்ள உறுப்புகள் திடீரென செயல்படாமல் முடங்கின. 

பரிதாபமான நிலையில் குழந்தையையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு பெங்களூருவில் உள்ள மஞ்சுளாவின் வீட்டிற்குச் சென்று உதவி கோரியபோதும், அவர்கள் மனம் இறங்கவில்லை என வேதனை தெரிவித்தார் நெப்போலியன்.

கை, கால்கள் செயல் இழந்து காதல் மனைவி கஷ்டப்படும் நிலையில், அவருக்கான அனைத்துப் பணிகளையும் செய்து, தனது குழந்தையையும் 16 ஆண்டுகளாக வளர்த்து ஆளாக்கி வருகிறார் நெப்போலியன். தானும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், மனைவியை தூக்கி வைக்க சிரமமாக இருக்கிறது என்று வேதனை தெரிவிக்கும் அவர், படுக்கை வசதி கொண்ட நாற்காலியை அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நெப்போலியன் மஞ்சுளா தம்பதியின் மகன், 11ஆம் வகுப்பு பயிலும் நிலையில், தொலைக்காட்சி, செல்போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் இணைய முடியாதநிலை இருக்கிறது. உறவினர்கள் கைவிட்ட நிலையில், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நெப்போலியன் , மஞ்சுளா தம்பதியினர்.