தமிழ்நாடு

மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய கணவருக்கு வலைவீச்சு

மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய கணவருக்கு வலைவீச்சு

webteam

சென்னையில் மனைவி மீது நண்பர்களுடன் சேர்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னைக்கு அருகே உள்ள கண்ணகி நகரில் வசிக்கும் தம்பதியினர் ராஜேஷ் மற்றும் சரண்யா. சரண்யா மீது ராஜேஷ் ஆத்திரத்துடன் இருந்துள்ளார். இதனால் மனைவியை கொலை செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, தனது நண்பர்கள் 4 பேரிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து சரண்யாவிடம் அன்பாக பேசுவதுபோல் நடித்து, அவரை திருவான்மியூரில் உள்ள பூங்காவிற்கு அழைத்துச்சென்றுள்ளார். முன்னதாக அங்கே தனது 4 நண்பர்களையும் மறைந்திருக்குமாறு கூறியுள்ளார்.

பூங்காவில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென தனது மனைவியை கத்தியால் ராஜேஷ் தாக்கியுள்ளார். அவருடன் சேர்ந்து அங்கிருந்த 4 நண்பர்களும் சரமாரியாக சரண்யாவை வெட்டியுள்ளனர். சரண்யா ரத்த வெள்ளத்தில் சரிய, ராஜேஷ் உள்ளிட்ட 5 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பூங்காவில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிருக்கு போராடிய சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். எதற்காக ராஜேஷ் தனது மனைவியை வெட்டினார் என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.