தமிழ்நாடு

மனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூட போராடிய கணவர் - வைரல் படம்

மனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூட போராடிய கணவர் - வைரல் படம்

Rasus

விபத்துக்கு காரணமான மதுக்கடையை அகற்றக்கோரி பெண்ணின் சடலத்துடன் அவரது கணவர் சாலையில் அமர்ந்து போராடியது காண்போரை கண்கலங்கச் செய்தது.

கோவையிலிருந்து ஆனைக்கட்டி வழியாக கேரளா செல்லும் சாலையில், ஜம்புகண்டி என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபானக்கடை காரணமாக அந்தச் சாலையில் கடந்த ஒரு வருடமாக பல்வேறு வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்கூட இதே சாலையில் மதுபோதையில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.

கோவை தடாகம் பகுதியைச் சேர்ந்த மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான ரமேஷ் என்பவரது மனைவி ஷோபனா. இவர் தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு நேற்று மாலை வீட்டிற்குச்  சென்று கொண்டிருந்தார். அப்போது ஜம்புகண்டி பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், ஷோபனா சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷோபனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது மகள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இந்தச் சம்பவம் குறித்து ரமேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரமேஷ், மனைவியின் சடலத்தோடு நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். விபத்துக்கு காரணமாக மதுக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி சாலையின் நடுவே அமர்ந்துக் கொண்டார். 

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் ரமேஷூக்கு ஆதரவாக சாலையில் அமர்ந்து போராடினர். இந்தச் சம்பவம் காட்டுத் தீயாய் பறக்க அங்குவந்த காவல்துறை உயர் அதிகாரிகள் ரமேஷ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததோடு, விபத்திற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து ரமேஷ் மற்றும் அங்கிருந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மனைவி ஒரு புறம் இறந்து கிடக்க, மகள் உயிருக்கு போராடிய போது அந்தக் கவலையெல்லாம் ஒருபுறத்தில் இருந்தாலும், நெஞ்சில் வைராக்கியத்தோடு விபத்துக்கு காரணமான மதுக்கடையை மூட வலியுறுத்தி ரமேஷ் போராடியது அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரச் செய்தது. ரமேஷ் தனது மனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் போராடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.