நெல்லை பஸ் நிலையத்தில் கணவன் சுதாகர், மனைவி பேச்சியம்மாளை தகராறின் போது அரிவாளால் கொலை செய்தார். பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சுதாகர் தப்பி ஓடினாலும், பின்னர் போலீசில் சரணடைந்தார். குடும்ப பிரச்சனைகள் காரணமாகவே கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்.
நெல்லை மாவட்டம் பாலாமடை பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (26). இவருடைய மனைவி பேச்சியம்மாள் (25). கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை இருவரும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு வைத்து இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே திடீரென மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சுதாகர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த சுதாகர், அங்கிருந்து தப்பி ஓடினார்.
உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்லும் பஸ் நிலையத்தில், மக்கள் கூட்டத்துக்கு இடையே நடந்த இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இது குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் சரவணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தப்பி ஓடிய சுதாகர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாகவே அவர் கொலையைச் செய்துள்ளார் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. எனினும் அவர் வேறு எதற்காக கொலை செய்தார், இதன் உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சுதாகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.