தமிழ்நாடு

தாமிரபரணியில் சோகம்: மனைவி கண்முன்னே புதுமாப்பிள்ளை பலி

தாமிரபரணியில் சோகம்: மனைவி கண்முன்னே புதுமாப்பிள்ளை பலி

webteam

மனைவி கண்முன்னே ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளையும் அவரது சகோதரியும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கோவில்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (26). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மிட்டாய் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கும், தென்திருப்பேரை மாவடிபண்ணையை சேர்ந்த ஆனந்திக்கும் (21) 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார் செந்தில்குமார். உடன் அவர் தங்கை ராதாவும் (18) வந்திருந்தார்.

நேற்று மாலை செந்தில்குமார், ஆனந்தி, ராதா மற்றும் ஆனந்தியின் அம்மா ஆகியோர் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற செந்தில்குமாரும் ராதாவும் தண்ணீரில் மூழ்கினர்.
இதை பார்த்து அனைவரும் கூச்சலிட்டனர். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டு தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 2 மாதத்தில் மனைவி கண் முன்னே புதுமாப்பிள்ளை, தங்கையுடன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.