தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காதல் திருமணம் செய்த புது மாப்பிள்ளை அடுத்த ஒரு சில நாட்களிலேயே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தார்பட்டியை சேர்ந்தவர் பிரதாப். 23 வயதான இவர், கட்டிட தொழில் செய்து வந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த ரெங்கலட்சுமி என்பவரை காதலித்து, போடி தீர்த்த தொட்டியில் வைத்து திருமணம் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து, ரெங்கலட்சுமியின் தாயார் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் மீதான விசாரணைக்கு சென்றபோது, பிரதாப்பை காதல் திருமணம் செய்த ரெங்கலட்சுமி, அவரது தாயாருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த பிரதாப் ஆளில்லா நேரமாக பார்த்து வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மகனின் இறப்பை கண்ட பிரதாப்பின் தாயார் பழனித்தாய் கதறி அழுத நிலையில், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், பிரதாபின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காதலித்து திருமணம் செய்த புது மாப்பிள்ளை திருமணம் முடித்த சில நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.