மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இடுப்பில் மறைத்து வைத்த கத்தியை எடுக்க முயன்றபோது கணவர் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
சென்னை, அயனாவரத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் மனோகரன் (28). இவர் சரிதா (24) என்பவரை ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்தார். சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோகர் குடித்துவிட்டு சரிதாவை அடிப்பதையும், துன்புறுத்துவதையும் வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகே இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு சரிதா அடிக்கடி சென்றுள்ளார். அந்த வகையில் தாயார் வீட்டிற்கு சரிதா சென்றிருந்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு குடிபோதையில் அங்கு மனோகர் வந்துள்ளார்.
அங்கு அவர் தகராறில் ஈடுபடுவே, சத்தம் கேட்டு அருகே இருந்த உறவினர் ராகவேந்திரன் (65) வந்துள்ளார். இதையடுத்து வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது மனோகரன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் கத்தி அவரது ஆணுறுப்பையும், அடிவயிற்றிலும் வெட்டியுள்ளது. இதனால் அவருக்கு அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. இருப்பினும் கத்தியை வெளியே எடுத்து ராகவேந்திரனை அவர் குத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இருவரையும் காவல்துறையினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக ரத்தம் வெளியே காரணத்தால் மனோகரன் உயிரிழந்தார். படுகாயமடைந்த ராகவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.