வளசரவாக்கம் அருகே தனது மனைவியுடன் சப்-இன்ஸ்பெக்டர் அடிக்கடி பேசி வருவதாகவும் தட்டி கேட்டதற்கு தன்னை தாக்கியதாகவும் கணவர் புகார் அளித்துள்ளார்.
வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் “ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் தனது மனைவியுடன் அடிக்கடி பேசி வருகிறார். நேற்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது சப் இன்ஸ்பெக்டரும் எனது மனைவியும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன்.
இதையடுத்து ராஜேஷ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் புகைப்படங்களுடன் முறையிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் என்னை தாக்கினார். எனவே ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தன் மீது ஜனார்த்தனன் பொய் புகார் அளித்துள்ளதாக ராஜேஷ் தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டது. இருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராயலா நகர் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர், இருவரிடமும் விசாரணை செய்து வருகிறார்.