தமிழ்நாடு

“புகார் அளிக்கச் சென்ற என் மனைவியை வசியப்படுத்துகிறார்” - காவல் ஆய்வாளர் மீது புகார்

“புகார் அளிக்கச் சென்ற என் மனைவியை வசியப்படுத்துகிறார்” - காவல் ஆய்வாளர் மீது புகார்

webteam

குடும்ப பிரச்னை காரணமாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற மனைவியை காவல் ஆய்வாளர் வசியப்படுத்துவதாக கணவன் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த 15ம் தேதி குடும்பத்தகராறு காரணமாக தட்டார்மடம் காவல்நிலையத்தில் தனலட்சுமி புகார் கொடுக்கச் சென்றுள்ளார். இதையடுத்து தனலட்சுமி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கஜேந்திரனிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த போனின் ஆடியோ பதிவாகி உள்ளது. இந்த ஆடியோ குறித்து ஜெகதீஷ், தனலெட்சுமியிடம் கேட்டுள்ளார். ஆனால் தனலெட்சுமி இதை மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவன் ஜெகதீஷ் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில்,  “16ம் தேதி தனது பிறந்த வீட்டிற்கு தனலெட்சுமி சென்று விட்டார். 17ம் தேதி என் வீட்டிற்கு வந்த கஜேந்திரன் என்னை அடித்து உதைத்து அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் எனது போனில் இருந்த ஆடியோவையும் அழித்து விட்டார். 

இதுகுறித்து யாரிடமும் தெரிவித்தால் உனது உறவினர்கள் மீது பொய் வழக்குப் போட்டு அவர்களையும் சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்டினார். மறுநாள் சில காவலர்களை அனுப்பி என்னைக் கூப்பிட்டு வரச்சொல்லி, இதுகுறித்து யாரிடமும் கூறினாயா? எனக் கேட்டு சுமார் 2 மணி நேரம் என்னை கீழே உட்கார வைத்தார். 

நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை எனக் கூறிய பிறகே என்னை அனுப்பி வைத்தார். நடக்காத சம்பவத்திற்காக என் மீதும் எனது உறவினர்கள் மீதும் பொய் வழக்கு கொடுத்துள்ளார் தனலட்சுமி. அதன்படி எங்கள் மீது காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வழக்குப் பதிவு செய்ய முயற்சித்து வருகிறார். ஆகவே எனது மனைவியை கஜேந்திரனிடமிருந்து மீட்டுத்தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.