16 வயது சிறுமியை கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராமசாமி மகன் அசோக்குமார்(35). இவருக்கும் சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்த செல்லகிளிக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அசோக் குமார் தனது மில்லில் வேலை செய்து வந்த 16 வயது சிறுமியிடம் “நான் உன்னை காதலிக்கிறேன். எங்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால், உன்னை நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள என் முதல் மனைவி சம்மதம் தெரிவித்து விட்டார்” எனக்கூறி வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் செல்லக்கிளி சிறுமியை கடத்திச் சென்று தனது கணவருக்கு கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அசோக் குமார், செல்லக்கிளி ஆகியோர் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி அவர்கள் இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.