வறட்சியால் ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான மயில்கள் தஞ்சமடைந்த சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.
வறட்சியால் காடுகளை விட்டு வெளியேறிய மயில் கூட்டம் கூட்டமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றி வருகின்றன. 95 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மயில்கள் அன்றாடம் சுற்றுகின்றன.
அவைகள் ஆட்சியரிடம் மனுக்கொடுக்க வந்தவையல்ல. காடுகள் அழிக்கப்பட்டதாலும், போதிய மழையில்லாததாலும் ஏற்பட்ட வறட்சியால் உணவையும், நீரையும் தேடி வந்தவை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட பசுமையாக இருந்த, அவ்வனப்பகுதி தற்போது சருகாக காட்யளிக்கிறது. அந்த இடங்களில் தான் மயில்கூட்டங்கள் இரைதேடி அலைகின்றன. இம்மயில்களின் பரிதாப நிலையைக்கண்டு சிலர் நாள்தோறும், அவற்றுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.