சென்னையில் கடல்சார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சினர்ஜி மாரிடைம் என்ற கடல்சார் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி நடைபெற்றுள்ளது. ஜெயக்குமார், வேல்கண்ணன், பாண்டியராஜ், பெலிக்ஸ், ஆதி ஆகியோர் லட்சக்கணக்கான ரூபாய் ஊதியத்தில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை இவர்களிடம் கொடுத்துள்ளனர்.
இந்த மோசடிக்கு சினர்ஜி மாரிடைம் நிறுவன ஊழியர் ஜோன்ஸ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். அதன்மூலம் பணம் கொடுத்த இளைஞர்களுக்கு சினர்ஜி மாரிடைம் நிறுவன வளாகத்திலேயே இந்தக் கும்பல் தேர்வும் நடத்தியுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சென்னையில் தங்கியிருந்த வேல் கண்ணன் மற்றும் பெலிக்ஸை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.