தமிழ்நாடு

வனத்துறை விசாரணையில் விவசாயி உயிரிழந்தாரா? மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

webteam

வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமை வனப்பாதுகாவலர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த வாகைகுளத்தை சேர்ந்த அணைக்கரைமுத்து (76) என்பவர் வீட்டின் பின் பகுதியில் சுமார் 2½ ஏக்கரில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்துவருகிறார். இரவு நேரங்களில் தோட்டத்தில் காட்டுபன்றிகள் வருவதால் தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடையம் வன சரக அதிகாரிக்கு புகார் வந்த நிலையில் அணைக்கரை முத்துவை கடையம் வனசரக அலுவலர்கள் விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அப்போது அணைக்கரை முத்து மின்வேலி அமைத்தது தவறு எனவும் தானே ஒப்புக்கொண்டு அதற்கான அபராதத்தையும் கட்டுவதாக தெரிவித்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நெஞ்சுவலிப்பதாகவும் வனத்துறை அதிகாரிகளிடம் அணைக்கரை முத்து தெரிவித்துள்ளார். உடனடியாக வனதுறை ஜீப் மூலம் கடையம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அனக்கரைமுத்து உயிரிழந்தார்.

வனத்துறை அதிகாரிகள் விசாரணை என அழைத்து சென்று அவரை தாக்கியதில்தான் தந்தை உயிரிழந்ததாக அனக்கரை முத்துவின் மகன் நடராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் 176 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமை வனப்பாதுகாவலர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.