தமிழ்நாடு

சிறுவனை அடித்து கையால் மலம் அள்ள வைத்த விவகாரம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சிறுவனை அடித்து கையால் மலம் அள்ள வைத்த விவகாரம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

webteam

பட்டியலின சிறுவனை அடித்து, கையால் மலம் அள்ள வைத்த சம்பவம் தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடாராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அறிவரசன். பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 15 ஆம் தேதி மாலை அறிவரசன் இயற்கை உபாதையை கழிக்க, அருகே இருந்த விவசாய நிலத்தில் உள்ள முட்புதருக்குள் சென்றுள்ளார்.

அதைப் பார்த்த வேறு சமூகத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அந்த மாணவனின் சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாகத் திட்டி கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. மேலும், மலத்தை கையால் வாரிக்கொண்டு போய் வேறு இடத்தில் வீசு என்று தொடர்ந்து அந்த மாணவனை மூங்கில் கம்பால் அடித்து துன்புறுத்தி உள்ளார். மாணவன் அடி பொறுக்காமல் இரண்டு கையால் மலத்தை அள்ளி எடுத்து, அருகில் உள்ள ஏரியில் வீசி உள்ளார். இதை அறிந்த பெற்றோர்கள், பென்னாகரம் காவல் நிலையத்தில் ராஜசேகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அறிக்கை அளிக்க 4 வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.