தமிழ்நாடு

மனித உறுப்புகளை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துச்செல்லும் அவலம்!

webteam

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக பிளாஸ்டிக் டாப்பில் எடுத்துச்செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த பின்னர், நோயாளியின் உடலில் இருந்தது வெளியே எடுக்கப்பட்ட உடலின் உறுப்புகள் ஆய்வுக்காக பிளாஸ்டிக் டாப்பில் எடுத்துச்செல்லப்படுகிறது. உதாரணமாக பித்தப்பையில் கிலோ கணக்கில் எடுக்கப்படும் கட்டிகள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக, அதனை பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள திரவத்தில் போட்டு நோயாளியின் உறவினர்களிடமே கொடுத்து செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் இருக்கும் "பெத்தாலஜி' (உயிர்குறியியல்) பிரிவுக்கு எடுத்துச்செல்லுமாறு கூறுகின்றனர். 

நோயாளியின் உறவினர்களும் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளை டப்பாவில் போட்டுக் கொண்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் இருந்தது, செங்கல்ப்பட்டு மருத்துவ கல்லூரிக்கு பேருந்துகளிலும், மின்சார இரயிலிலும், இருசக்கர வாகனங்களிலும் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு மனித உடல் உறுப்புகளை பையில் வைத்து கொண்டு சக மனிதர்களுடன் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். சில நேரத்தில் டப்பாவில் இருக்கும் திரவம் கீழே கொட்டிவிடுவதால், உறுப்புகளை கொண்டு செல்பவர்களுக்கும் உடன் பயணிப்பவர்களுக்கும் கண் எரிச்சல், தோல் வியாதிகள் என உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. 

இதுதவிர மருத்துவமனைகளில் அனுமதி ஆகும் ஆதரவு இல்லாத நோயாளியின் ஆய்வு செய்யப்பட வேண்டிய உறுப்புகளை, செங்கல்ப்பட்டு மருத்துவ கல்லூரிக்கு எடுத்து செல்ல யாரும் இல்லாத காரணத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலே அவை குப்பைக்கு செல்லும் வருந்தத்தக்க நிகழ்வும் ஏற்படுகிறது.