செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் மனிதக் கழிவுகளை மனிதரே அள்ளும் அவல நிலைக்கு தினக்கூலி ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டணக் கழிப்பிடத்தின் கழிவுநீர் தொட்டி, நேற்று மாலை நிரம்பியது. இதையடுத்து கழிவுநீருடன், மனிதகழிவுகளும் வெளியேறத் தொடங்கின. பேருந்து நிலையத்தில் தினக் கூலிகளாக பணிபுரிபவர்களை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யுமாறு நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் கழிவுநீரை சுத்தம் செய்ய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், கைகளாலேயே அதை அப்புறப்படுத்தினர்.
இந்தச் சூழலில் செங்கல்பட்டு நகராட்சியில் கடந்த ஆறு மாதங்களாக கட்டணக் கழிப்பறைக்கு டெண்டர் விடப்படவில்லை என்றும், தனக்கு தேவையான ஆட்களை வைத்தே புதிய பேருந்து நிலைய கட்டணக் கழிப்பறையை ஆணையர் நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது குறித்து பல விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், கழிவுநீரை அகற்ற இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதுபோன்ற அவலங்கள் நிகழ்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அத்துடன் இவற்றை அரசு தான் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வெண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.