விடுமுறை நாள் என்பதால் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
அத்திவரதர் வைபவம் தொடங்கி 28ஆவது நாளான இன்று சுவாமி, இளம் நீல நிறப் பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விடுமுறை நாள் என்பதால் நள்ளிரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மட்டும் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் ஆங்காங்கே கயிறுகள் கட்டி கூட்ட நெரிசலை காவலர்கள் தவிர்த்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வதால் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினர் முழுமையாக தூய்மைபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.