தமிழ்நாடு

கபாலீஸ்வரர் கோயில் சிலை மாயமான விவகாரம்... பெண் அதிகாரி கைது

Rasus

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னைவனநாதர், ராகு மற்றும் கேது சிலைகள் கடந்த 2004-ஆம் ஆண்டு மாயமாகின. இதுகுறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சிலைகள் மாயமானபோது கபாலீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக இருந்த திருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

3 சிலைகள் திருடப்பட்டதில் திருமகளுக்கு தொடர்பிருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது. திருமகள் தற்போது இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக உள்ளார். முன்னதாக கைது செய்யப்பட்டால் உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் திருமகள் உத்தரவு பெற்றிருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து கும்பகோணம் அழைத்துச் செல்லப்பட்ட திருமகள், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இரவு நேரம் என்பதாலும், ஜாமீன் பெற உச்சநீதிமன்ற உத்தரவு பெற்றிருப்பதாலும், திருமகளை திங்கள்கிழமை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு திருமகள் அழைத்துச் செல்லப்பட்டார்.