தமிழ்நாடு

புயல் காலங்களில் மரங்கள், பயிர்களை காப்பது எப்படி?: விவசாயிகளுக்கு அறிவுரை

புயல் காலங்களில் மரங்கள், பயிர்களை காப்பது எப்படி?: விவசாயிகளுக்கு அறிவுரை

Rasus

புயல் மற்றும் மழைக்காலங்களில் தென்னை, மா, பலா, முந்திரி, வாழை மரங்கள் மற்றும் நெல் போன்ற பயிர்களை காக்க, விவசாயிகளுக்கு வேளாண்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தென்னை மரங்களில் இளம் ஓலைகளை தவிர்த்து, காய்ந்த மட்டைகள், இளநீர், தேங்காய் போன்றவற்றை வெட்டி அகற்றிவிட வேண்டும். இதனால் மரம் புயலைத் தாங்கி நிற்கும். புயல், மழை போன்றவற்றை எதிர்கொள்வதற்கு 4 நாட்களுக்கு முன்பே நீர்ப்பாய்ச்சுதை நிறுத்திவிட வேண்டும். இதன்மூலம் தென்னையின் வேர் மண்ணில் நன்கு இறுகி, மரம் சாய்ந்துவிடாமல் பாதுகாக்கும். ஆகவே விவசாயிகள் தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

புயலின் போது மா, பலா, முந்திரி மரங்களின் பக்கவாட்டு கிளைகளையும், அதிகப்படியான இலைகளையும் வெட்டிவிட வேண்டும். இதன்மூலம் காற்று மரங்களின் ஊடே புகுந்து செல்லும் என்பதால், மரம் வேரோடு சாயாது. புயலை எதிர்கொள்வதற்கு 2 நாள்களுக்கு முன்பே நீர்ப்பாய்ச்சுவதை நிறுத்திவிட்டால், வேர் இறுகி மரம் காற்றில் சாயாமல் தடுக்கும்.

வாய்க்கால் மூலம் மழை நீரை வெளியேற்றி விட்டால் நெல், வாழை, பருத்தி, கரும்பு, நிலக்கடலை மற்றும் சிறுதானிய பயிர்களை காப்பாற்றி விடலாம் என வேளாண்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களை கஜா புயல் சமீபத்தில் புரட்டிப்போட்டது. புயலால் ஏராளமான தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் வேரோடு வேராக சாய்ந்தன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.