தமிழ்நாடு

“பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?” - டிஐஜி பாலகிருஷ்ணன் பேட்டி

webteam

சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ரயில்வே காவல்துறை டிஐஜி பாலகிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை பார்க்கலாம். 

சமூக வலைத்தளங்களை பொறுத்தவரை தவிர்க்க முடியாத ஊடமாக மாறிவிட்டது. அதனால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அதே சமயம் அதை கவனமாக கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. 

பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிரக் கூடாது. வலைத்தளங்களில் எதை யார் யார் பார்க்க வேண்டும் என்ற செட்டிங் உள்ளது. அதை பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் தேவையில்லாத நபர்கள் தங்கள்  பக்கத்தை பார்க்க முடியாத வண்ணம் செய்ய முடியும்.  

பல பேர் அறிமுகமில்லாத நபர்கள் வேண்டுகோள் விடுத்தால் கூட அதை ஏற்றுக்கொண்டு பின்னர் பிரச்னையில் சிக்கி கொள்கின்றனர். அதனால் அறிமுகமில்லாத நட்பை சமூகவலைத்தளங்களில் தவிர்ப்பது மிக மிக நல்லது.

ஒரு நபரின் சமூக வலைத்தள நடவடிக்கைகளை கொண்டே அவரின் நோக்கத்தை அறிந்து கொள்ளலாம். அவர் தவறாகப் பேச ஆரம்பிக்கும்போதே அவர்களின் நட்பை துண்டித்துவிடுவது பல நல்ல விஷயங்களுக்கு வழி வகுக்கும். 

பெண்கள் புகார் அளிக்க காவல்நிலையம் வரத்தேவையில்லை. தமிழ்நாடு காவல்துறை இணையதளம் மூலமும் இமெயில் மூலமும் புகார் அளிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட சமூக வளைத்தளங்களில் புகார் அளித்து கணக்குகளை முடக்கலாம். காவல்துறையிடம் புகார் அளித்தால் தொடர் துன்புறுத்தல்களுக்கு முடிவு வரும். சைபர் கிரைம் குற்றங்களை புலனாய்வு செய்ய தற்போது நவீன வசதிகள் வருகின்றன. 

பாதிக்கப்பட்ட பெண்கள் 18 வயதிற்கு கீழ் இருந்தால் அவர்களின் பெயர் முகவரி, படம் ஆகியவை வெளியிடக்கூடாது என சட்டப்பாதுகாப்பு உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூட சட்டப்பாதுகாப்புகள் இருக்கின்றன. பெயர்கள், படங்கள் வெளியிட அப்பெண்கள் விரும்பாத பட்சத்தில் சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி பாதுகாப்பு அளிக்கப்படும்.