தமிழ்நாடு

பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா சொத்துக்களை வாங்கியது எப்படி ?

பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா சொத்துக்களை வாங்கியது எப்படி ?

webteam

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி எந்தெந்த சொத்துக்களை சசிகலா எப்படி வாங்கினார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

வருமான வரித்துறையின் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஆயிரத்து 674 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சொத்துக்களை சசிகலா வாங்கியுள்ளதாக வருமான வரித்துறை வாதிட்டது.

இதுதொடர்பான குற்றச்சாட்டுகளின் படி, வருமான வரித்துறை தமது மதிப்பீட்டு பணிகளை முடித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக குறுக்கு விசாரணை அவசியம் இல்லை என வருமானவரித் துறை வாதிட்டதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், சசிகலாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி எந்தெந்த சொத்துக்களை சசிகலா எப்படி வாங்கினார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டபோது, அன்று முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை, தம்மிடமிருந்த பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மூலம் ஏராளமான அசையா சொத்துக்களை சசிகலா வாங்கியுள்ளதாக தெரிகிறது.

புதுச்சேரியில் உள்ள ரெசார்ட்-டை 168 கோடி ரூபாய்க்கு விலை பேசி, 3 டாடா ஏஸ் வாகனங்களில் 148 கோடி ரூபாய் அளவுக்கு, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரெசார்டின் உரிமையாளருக்கு சசிகலா அனுப்பியுள்ளார். அதில் 97 கோடி ரூபாயை பல்வேறு வங்கிகளில் கொடுத்து ரெசார்டின் உரிமையாளர் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியுள்ளதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல், ஓம்எம்ஆர் சாலையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தை 115 கோடி ரூபாய்க்கு விலைபேசி, அனைத்தையும் பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சசிகலா வாங்கியுள்ளார். இதில் 6 கோடி ரூபாயை தமது வங்கியில் வைப்புத் தொகையாக வைத்துள்ள ஐ.டி. நிறுவன உரிமையாளர், மீதமுள்ள தொகைகளை 7 பேருக்கு அனுப்பி புதிய நோட்டுகளாக மாற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை பேப்பர் மில்லை ரூ.600 கோடிக்கு வாங்கியதாகவும், அதில் ரூ.400 கோடி பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் ரூ.1 கோடி வீதம் மொத்தம் 400 பெட்டிகள் கொடுக்கப்பட்டது என பேப்பர் மில் உரிமையாளர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல், பெரம்பூர், மதுரையில் வணிக வளாகங்கள், சர்க்கரை ஆலைகள், காற்றாலைகள் என மொத்தம் ஆயிரத்து 674.50 கோடி மதிப்பீட்டில் பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சசிகலா சொத்துக்களை வாங்கியுள்ளது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.