தமிழ்நாடு

“ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு..?”- உயர்நீதிமன்றம் கேள்வி

“ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு..?”- உயர்நீதிமன்றம் கேள்வி

Rasus

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வரி பாக்கி வைத்துள்ளாரா என்பதை வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு செலவில் நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் வெங்கடேசன் தாக்கல் செய்த பதில் மனுவில், சொத்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 100 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, சொத்து வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு மற்றும் தனியார் சொத்துகளை நினைவில்லமாக மாற்ற எந்தச் சட்டத்தின் கீழ் முடிவெடுக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசும், மனுதாரர்களும் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர். அதேபோல், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி உள்ளதா? என்பதை வருமானவரித்துறையினர் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினர். ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை உள்ளதா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.