தமிழ்நாடு

‘கஜா புயல்’ - முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்ந்தது எவ்வளவு?

‘கஜா புயல்’ - முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்ந்தது எவ்வளவு?

rajakannan

கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரணமாக பல்வேறு தரப்பினர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாய் வழங்கியுள்ளதாக தமிழக அரசு தெ‌ரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2 கோடி ரூபாய்க்கான காசோலையும், ‌திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையும், சிட்டி யூனியன் வங்கி 1 கோடி ரூபாய்க்கான வரைவோலையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 லைக்கா நிறுவனம் 1 கோடியே ஒரு லட்ச ரூபாய், சக்தி மசாலா நிறுவனம் 1 கோடி ரூபாய், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் 25 லட்ச ரூபாய், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 20 லட்ச ரூபாய், திரைப்பட நடிகர் அஜித்குமார் 15 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள‌து. 

அதேபோல, 23ஆம் தேதி முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் 1 கோடி ரூபாய்க்கான காசோலையும், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையும் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ 

தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்கங்களின் சார்பில் 1 கோடி ரூபாய், ராம்கோ குழுமம் சார்பில் 1 கோடி ரூபாய், தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் 1 கோடி ரூபாய், மதுரை புறநகர் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா 10 லட்ச ரூபாய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 10 லட்ச ரூபாய், நடிகர் விவேக் 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜிஆர்டி குழும நிறுவனங்களின் சார்பில் முதல்வரிடம் 50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரணமாக 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.