தமிழ்நாடு

ராமநாதபுர நிதி நிறுவன மோசடியில் எத்தனை பேர்? : பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு நோட்டீஸ்

ராமநாதபுர நிதி நிறுவன மோசடியில் எத்தனை பேர்? : பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு நோட்டீஸ்

webteam

ராமநாதபுர நிதி நிறுவன மோசடியில், எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்? எத்தனை பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரதீப் சக்கரவர்த்தி, உயர் நீதிமன்ற கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமநாதபுரத்தில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பு பணம் தருவதாக தெரிவித்தனர். இதை நம்பி 19.9.2019-ல் 50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு உடன்படிக்கை பத்திரம், தேதி குறிப்பிடாமல் ஒரு கோடி மதிப்புள்ள காசோலைகள் தந்தனர். ஒரு ஆண்டு முடிந்ததும் காசோலையை வங்கியில் கொடுத்து பணம் வாங்கிக்கொள்ளுமாறும் உத்தரவாதம் அளித்தனர்.

இந்நிலையில் நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். நீதிமணி, ஆனந்த் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இருவரும் ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளது. வெளிநாடு தப்பிச்செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே நீதிமணி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்"
என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இந்த வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி இந்த மோசடியில் எத்தனைபேர் ஈடுபட்டுள்ளனர்? எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் தெரிவித்த நீதிபதி வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.