தமிழ்நாடு

எவ்வளவு காலத்துக்கு நினைவு இல்லங்களை அமைக்க போகிறீர்கள்? - உயர்நீதிமன்றம்

webteam

மறைந்த அனைத்து முதல்வர்களின் இல்லங்களையும் நினைவு இல்லங்களாக மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தீபக், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்திற்கும் சமுதாயத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கிய முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் இல்லங்கள் நினைவு இல்லங்களாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதனடிப்படையில் ஜெயலலிதாவின் இல்லத்தையும் நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு குறிக்கிட்ட தலைமை நீதிபதி, “தேர்த்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு சட்டம் இயற்றியிருப்பது சரிதான். ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு இதுபோல் நினைvu இல்லங்கள் அமைக்கப்போகிறீர்கள்? அனைத்து முதல்வர்களின் இல்லங்களையும் நினைவு இல்லங்களாக மாற்ற முடியாது. இது தொடர்ந்தால் அமைச்சர்களின் வீடுகளும் நினைவு இல்லமாக மாற்றப்படும் போல் உள்ளது. எனினும் தமிழக அரசு இந்த செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது” என கருத்து தெரிவித்தார்.

குறிப்பாக, "எத்தனை தலைவர்களுக்குத்தான் நினைவிடங்களை உருவாக்கிக்கொண்டே போவீர்கள்? ஒரு காந்தி, ஒரு நேரு, ஒரு படேல்தான் இருக்க முடியும். அனைத்துத் தலைவர்களுக்குமே நினைவிடங்களை உருவாக்கிக்கொண்டே போகமுடியாது" என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

மேலும், "மெரினாவில் இன்னும் இடம் ஏதாவது மிச்சம் வைத்திருக்கிறீர்களா?' என்கிற ரீதியிலான கேள்வியையும் தமிழக அரசிடம் முன்வைத்தது.

அத்துடன், "நீதித்துறையில் பல நீதிபதிகள் மிகப் பெரிய பங்களிப்பைத் தந்துள்ளனர். இதற்காக, அனைவருக்கும் நீதிமன்றம் முழுவதும் அவர்களுக்கு சிலைகளை நிறுவினால் என்ன ஆகும்?" என்று உதாரணத்துடன் அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தொடர்ந்து தீபக் தொடர்ந்த வழக்கு குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.