இந்தியக் கடலோர காவல் படையினர் இந்தியில் பேசாவிட்டால் சுட்டுக் கொல்வோம் என மிரட்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தங்களை இந்திய கடலோரக் காவல்படையினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதோடு, தங்கள் படகில் ஏறி தாக்கியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கூறியுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும், மேலும் சில மீனவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தாக்கப்பட்ட மீனவர்கள் காயங்களுடனும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளான மீனவர்கள் பிச்சை, ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறும் போது, இந்தி தெரியாமல் மீன்பிடித்தால் சுட்டுக் கொல்வோம் என கடற்படையினர் மிரட்டினர். இந்தியில் பேச சொல்லி தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், தங்களை சித்ரவதை செய்த இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது இந்தியக் கடலோர காவல் படையே இவ்வாறு செய்வது ஏற்புடையது அல்ல என்றும் அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து, இந்தியக் கடலோர காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, ராமநாதபுரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவும் மீனவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, எந்த மீனவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என இந்தியக் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்ததற்காக எச்சரிக்கப்பட்டதை திசைதிருப்புவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.