ஒசூர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியின் 6 மாத பெண் குழந்தையை காணவில்லை என புகாரளித்த நிலையில், 5 மணி நேரத்தில் குழந்தையை போலீசார் மீட்டனர்.
உத்திரப் பிரேதச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த ராம்கேவர் (27) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று நள்ளிரவு ஒசூர் வந்துள்ளார். ஒசூர் அருகே மகாதேவபுரம் என்னும் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக வந்த இவர்கள், கிராமத்திற்குச் செல்ல நள்ளிரவில் பேருந்து இல்லாததால் பேருந்து நிலையத்திலேயே தூங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை எழுந்து பார்த்தபோது 6 மாத கைக்குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அக்கம் பக்கம் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், இதுகுறித்து ஒசூர் நகர போலீசில் ராம்கேவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குழந்தையுடன் ஒருபெண் சந்தேகத்திற்கு இடமாக சென்றதாகவும் அவர் தன்னிடம் 20 ரூபாய் கேட்டதாகவும் ஆட்டோ ஓட்டுநர் ராஜா என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒசூர், ராயக்கோட்டை சாலையில் குழந்தையுடன் சென்ற பெங்களூரைச் சேர்ந்ந இராஜேஸ்வரி என்ற பெண்ணிடமிருந்து போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.