தமிழ்நாடு

ஒசூர்: போதை கணவரை மிரட்ட குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்

kaleelrahman

ஓசூர் அருகே போதைக்கு அடிமையான கணவருக்கு மிரட்டல் விடுத்த மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே புக்கசாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கூலித் தொழிலாளியான கிருஷ்ணப்பா, போதைக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்து மனைவி லட்சுமியுடன் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், கணவரை கண்டிக்கும் வகையில் அவருடைய மனைவி லட்சுமி, அடிக்கடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து நேற்று மனைவி லட்சுமி, உணவில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த மதுமிதா (9) உயிரிழந்தார். இதையடுத்து அந்த குழுந்தையின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிர் பிழைத்த லட்சுமியும் மற்றொரு குழந்தையும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)