தமிழ்நாடு

ஓசூர்: சாலையோரம் நின்ற ஒற்றை காட்டுயானை: ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்த மக்கள்

kaleelrahman

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி சாலையில் இன்று காலை ஒற்றை காட்டுயானை சாலையோரம் நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர் அடுத்த அஞ்செட்டி வனப்பகுதிக்குள் யானைகள், மான், காட்டெருமை, காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியின் நடுவில் ஓசூர் - ஒகேனக்கல் சாலை செல்கிறது. இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வனவிலங்குகள் சாலை ஓரத்தில் நிற்பதும், சாலையை கடந்து செல்வதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று செல்ஃபி எடுத்தும் அச்சுறுத்தியும் சென்றனர். ஆனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்.