கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள கெலமங்கலம் அருகே, பெற்றோரை இழந்து மரத்தடியில் வசித்த நான்கு குழந்தைகளை மீட்ட வட்டாட்சியர், அவர்களை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள ஆலப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி (45); இவரது மனைவி லட்சுமி (35). இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தேன்கனிக்கோட்டையை அடுத்த அரசகுப்பம் பஞ்சாயத்து அலுவலகத்தின் பின்புறம் குடிசையில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் குடும்ப பிரச்னையில் மனைவி லட்சுமியை, பொன்னுசாமி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இத்தம்பதிக்கு மொத்தம், 11 குழந்தைகள். இருவர், இறந்து விட்டனர். நான்கு பேருக்கு திருமணமாகி விட்டது. மீதமுள்ள ஐந்து பேரில், ஒரு பெண் குழந்தையை அவர்களது அண்ணன் அழைத்துச்சென்று விட்டதால், ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் மட்டும், கெலமங்கலம் அடுத்த ஜீவா நகரில், வீடு இல்லாமல் மரத்தடியில் வசித்தனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளியான அவர்களது தாய்மாமன் முருகப்பா, அவர்களை பாதுகாத்து வந்தார். இதையறிந்த, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் இளங்கோ, நேரில் சென்று விசாரித்தார். பின், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் காயத்ரி ஆகியோரிடம் அவர்களை ஒப்படைத்தார்.
மாற்றுத்திறனாளி முருகப்பாவுக்கு 1,500 ரூபாய் உதவித்தொகை மற்றும் தங்க வீடு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதாக, தாசில்தார் உறுதியளித்தார்.