தமிழ்நாடு

ஒசூர்: கல்குவாரிகளை மூட வலியுறுத்தி ஊரை காலிசெய்து விடிய விடிய போராட்டம் நடத்தும் மக்கள்!

webteam

ஓசூர் அருகே கல்குவாரிக்கு எதிராக கிராமத்தை காலி செய்த பொதுமக்கள், அங்கேயே கூடாரம் அமைத்து இரவு பகலாக 4 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மக்களுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த கொரட்டகிரி கிராமத்தின் அருகே உள்ள 6 கல்குல்வாரிகளின் கனரக வாகனங்கள் ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு செல்வதால் சாலை விபத்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கிராமத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அது சுமூகமாக முடியவில்லை. இந்நிலையில் `கொரட்டகிரி கிராமத்திற்கு உள்ளாகவே லாரிகள் செல்ல காவல்துறையினர், அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்’ என்று கூறி, கடந்த 11ஆம் தேதி அன்று கொரட்டகிரி கிராம மக்கள் ஆடு, மாடுகளுடன் 200க்கும் மேற்ப்பட்டோர் ஊரை காலி செய்து வனப்பகுதி ஒட்டிவாறு புறம்போக்கு நிலத்தில் கூடாரங்களை அமைத்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரை மையப்படுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேற்கொண்டு அதிகாரிகள் தரப்பில் `குவாரிகள் செயல்படாது; வாகனங்கள் கொரட்டகிரி கிராமத்திற்குள் நுழையாது’ என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

நான்காவது நாளாக தொடர்ந்து போராடிவரும் கிராம மக்களுடன் அவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் கலந்து கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுடன் சேர்ந்து அங்கேயே இரவு முழுவதும் தங்கி மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.