Murder
Murder Representation Image
தமிழ்நாடு

துக்க நிகழ்வில் பழிக்கு பழியாக கொலை - சென்னையில் நடந்த பயங்கரம்

PT WEB

சென்னை ஆதம்பாக்கத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொண்ட நபரை பழிக்கு பழியாக கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு 3 பேர் சரணடைந்தனர். இந்தக் கொலையை தடுக்க தவறிய ஆதம்பாக்கம் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்து இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(42), இவர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிரபல ரவுடி நாகூர் மீரான் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவரின் காரிய நிகழ்வு நேற்று அம்பேத்கர் நகர் 11வது தெருவில் நடைபெற்றது. அப்போது கருப்பு நிற மாஸ்க் அணிந்து கொண்டு பட்டாக் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் சீனிவாசனை சரமாரியாக வெட்டியது, அதனை தடுக்க முயன்ற குட்டிமா( 34), பிரதீப்(15), என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

சீனிவாசன்

மூவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, சீனிவாசனை மட்டும் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார் அசம்பாவிதங்களை தவிர்க்க குவிக்கப்பட்டனர். பரங்கிமலை துணை ஆணையர் தீபக் சுவாச், உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரித்தார்.

மடிப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்து விட்டு தப்பியோடியவர்களை தேடி வந்த நிலையில் விக்கி(எ)தமிழரசன், மணிகண்டன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் நீதிமன்றத்தில் விஜயகுமார், பாலாஜி, தினேஷ்குமார் ஆகியோர் சரணடைந்தனர். கைதான இருவர் நாகூர் மீரானின் கொலைக்கு பழிவாங்க கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். கொலையைத் தடுக்க தவறிய ஆதம்பாக்கம் ஆய்வாளர் வீரமணியை சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் 5 க்கும் மேற்பட்ட நபர்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.