தமிழ்நாடு

சாத்தான்குளம்: நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது- ப.சிதம்பரம்

சாத்தான்குளம்: நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது- ப.சிதம்பரம்

Rasus

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகள் உயிரிழந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது பிறந்திருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகள் உயிரிழந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது பிறந்திருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன். 1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில் காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை.
தூத்துக்குடியில் காவல்துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது”எனப் பதிவிட்டுள்ளார்.