தமிழ்நாடு

ஹாங்காங் டூ புதுக்கோட்டைக்கு பறந்துவந்த காதல்! தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம்!!

webteam

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்து இன்று தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி புதுக்கோட்டையில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு காண்போரை மகிழ்வில் ஆழ்த்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி உமா. இவர்களது மகன் காத்த முத்து (எ) மணிகண்டன். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஹாங்காங்கில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்போது காத்தமுத்து (எ) மணிகண்டனுக்கும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த அலார்கான் - செரில் தம்பதியரின் மகள் சென் (எ) செல்சீ-க்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இந்த காதல் குறித்து மணிகண்டனும் அதேபோல் செல்சீயும் அவரவர் வீட்டில் தெரிவித்துள்ளனர்.

அப்போது இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு முதலில் தயக்கம் காட்டிய நிலையில் பின்னர் காதலுக்கு மரியாதை கொடுத்து தங்களது பிள்ளைகளின் காதலை உணர்ந்து இருவரின் காதலுக்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படியும் கலாசாரத்தின் முறைப்படியும் மணிகண்டன் - செல்சீ திருமணம் நடைபெற வேண்டும் என்று மணிகண்டன் பெற்றோர் கேட்டுக் கொண்டதன் படி செல்சீயின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

அதனையடுத்து இன்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் உறவினர்கள் புடை சூழ மணிகண்டன் - செல்சீ திருமணம் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தாலிகட்டி நடந்தது. பின்னர் விருந்தோம்பல் நிகழ்ச்சி திருவப்பூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்துகொண்டு மணிகண்டனையும் செல்சீயையும் வாழ்த்தினர்.