தமிழ்நாடு

ஊருக்கெல்லாம் வீடு கிடைக்க உதவியவருக்கே வீடற்ற நிலை - வீதியில் தஞ்சமடைந்த குடும்பம்!

JustinDurai

ஊருக்கெல்லாம் வீடும், வீட்டுமனைப் பட்டாவும் கிடைக்க போராடிய முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் குடும்பம், தற்போது வீடின்றி தவித்து வருகிறது. 2 பெண்கள் குழந்தைகள், ஒரு மாற்றுத்திறனாளி மகனுடன் வீதியில் வசிக்கிறது அந்த குடும்பம்.

தெருவெங்கும் தேர்தல் பரப்புரை ஒலிக்க, இவர்களது தவிப்பு எவர் காதுகளுக்கும் கேட்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நத்தமாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சைவராசு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சியில் களப்பணியாற்றியவர். வீடற்றவர்களுக்கு வீடு, வீட்டுமனைப் பட்டா என தன்னலம் கருதாமல் பிறர் நலனுக்காக உழைத்தவர். குடும்பத்துடன் வசித்து வந்த இவரது குடிசை இரவோடு இரவாக தீப்பிடித்து எரிந்ததில், நிர்கதியாகி விட்டனர்.

மகள் செங்கொடியோ கணவரால் கைவிடப்பட்டவர். மனநலம் பாதிக்கப்பட்ட பேரன், இரண்டு பேத்திகளுடன் கடந்த ஒரு வாரமாக வீடின்றி வீதியிலேயே வசித்து வருகின்றனர். குடும்ப அட்டை, பள்ளிச் சான்றிதழ் என அனைத்தும் தீக்கிரையாகிப் போக, வாழ்வதற்கு போதுமான தேவைகளை ஏற்படுத்தி தரக் கோருகிறார் சைவராசு.

தேர்தலுக்கு பிறகு வீடு கட்ட நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. அதுவரை தற்காலிக இருப்பிடமும், தேவையான உணவுப் பொருட்களும் இவர்களது தேவையாக உள்ளது.