10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இந்தவகையில், 2011க்கு பிறகு 2021 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். அதற்காக கடந்த 2019ம் ஆண்டில் 8,754 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 3,941 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, நடக்கவிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், மறுபுறம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான், அரசுகளின் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதால், தாமதமின்றி அதை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதோடு, சாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்தநிலையில், மக்கள் தொகையுடன் வெளிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த, மத்திய அமைச்சரவை கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வு செய்தார். மேலும், இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக அமித்ஷா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். முதல்முறையாக, இந்த கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 34 லட்சம் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் பேர், அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்வார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.