வீட்டில் கள்ளத்தனமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்ததில் திமுக பிரமுகரின் தம்பி படுகாயம் அடைந்தார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் கோபாலகண்ணன். இவர் திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராகவும் 1வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இவரது தம்பி் இசக்கிமுத்து என்பவர் இன்று வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் இசக்கிமுத்துவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. பயங்கர சப்தமும் ஏற்பட்டது. சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்தபோது கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்துள்ளார்.
அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்து பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் வெடிக்காத குண்டுகள் வீட்டின் உள்ளே இருப்பதால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை துவங்க இருகின்றனர்.