கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை pt web
தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை.. 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

டிட்வா புயலின் எதிரொலியால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை நீடித்துவரும் நிலையில் இன்றும் 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

Rishan Vengai

டிட்வா புயலின் தாக்கத்தால் இலங்கையில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலானது, இலங்கையில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது.. டிட்வா புயலின் தாக்கத்தால் இதுவரை 450க்கும் மேற்பட்டோர் இலங்கையில் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

டிட்வா புயல் இலங்கை

தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்த டிட்வா புயல், சென்னையிலிருந்து 40 கிமீ தொலையில் ஒரே இடத்தில் நிலைகொண்டதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகப்படியான மழைப்பொழிவை ஏற்படுத்தியது..

இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இருந்த டிட்வா, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நேற்று வலுவிழந்தது.. இன்று கரையை கடக்கும் என சொல்லப்பட்டாலும், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது..

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்காக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் முதலிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..