எச்ஐவி பாதிக்கப்பட்ட மாணவனை பள்ளியில் சேர்க்கவில்லை என கூறப்பட்ட புகாரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் ஒரு மாணவரை சேர்க்க அவரது உறவினர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த மாணவர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதால் தலைமையாசியர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவரின் உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவனை பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க பள்ளி தலைமையாசிருக்கு மாவட்டக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர் சேர்க்கைக்காக வந்த போது தலைமையாசிரியருக்கும் மாணவரின் பெற்றோருக்கும் இடையே என்ன நடந்தது என்பதையும் விளக்கமாக கேட்டுள்ளனர்.
மாணவன் சரியாக படிக்கவில்லை என்பது குறித்தே தலைமையாசிரியருக்கும் மாணவரின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. மாணவரை சேர்க்க முடியாது என்று தான் கூறவில்லை என்றும் தனக்கு அந்த அதிகாரமும் இல்லை என்றும் தலைமையாசிரியர் கூறியுள்ளார். மேலும் மாணவன் மீண்டும் அணுகினால் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.